பெண் தேவதை...தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா

 பெண் தேவதை...👸👸👸

தேவதைகள் வீட்டிலும் வாசம் செய்வர் பெண் குழந்தை வடிவில்...

ஓர் தந்தைக்கும் மகளுக்கும் உள்ள அந்த அழகான உறவு பற்றி இந்த குறும்பதிவில் காண்போம்...

ஓடி வருகையிலே – கண்ணம்மா !
உள்ளங் குளிரு தடீ !
அடித்திரிதல் கண்டால் – உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ !

உச்சி தனை முகந்தால் – கருவம்
ஓங்கி வளரு தடீ !
மெச்சி யுனை யூரார் – புகழ்ந்தால்
மேனி சிலர்க்குதடீ !

கண்ணத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ !
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா !
உன்மத்த மகுதடீ !

உன்னை முதல் முறை கண்ட அந்த நாள் என் வாழ்வின் உச்ச கட்ட மகிழ்ச்சியில் திளைத்தேன்.

கலியுகத்திலும் இந்த பூமிக்கு இறைவனால் தேவதையை அனுப்ப முடியும் என்றால் அது உன் உருவில் மட்டுமே.

உன் மதி முகம் பார்க்க ஏங்கிய திங்கள் பத்து.

உன் ஸ்பரிசம் அனுபவித்த அந்த தருணம் உணர்ந்தேன் முகிழின் வாசம்.

தினம் உன் முகம் காட்டும் திகழ் முன் அந்த பரிதியும் தோல்விகொள்ளும்.

உன் பிஞ்சு கால் விரல்களை பதித்து நீ என் மார்பின் மேல் நடை பழகும் தருணம் நான் உணர்ந்தேன் தென்றலும் நடை பழகும் நேரம் இது என.

உன் விறல் பிடித்து நகம் கடிக்கும் வேளையில் உணர்கிறோம் பட்டு இன்னும் மென்மை கொள்ள வேண்டுமோ என.

உன் நீராடவே கங்கை காவேரி பரணி வைகை பிறந்ததோ.

உன் குளியல் பின் வீதி மணக்கும் குமஞ்சம் கொடுக்கும் கதகதப்பில்.

உன் சிறு கைகள் ஊட்டும் உணவு அமிர்தம் ஆகுது.

உன் புன்முறுவல் மற்றும் புன்னகை எனக்கு தினம் கிடைக்கும் ஊட்டச்சத்து.

உன் குறும்புகளை ரசிக்கும் வேளையில் உணர்கிறேன் நானும் குழந்தை ஆவதை.

உன் கன்னங்கள் சந்தோசத்தில் சிவந்தாலும் மருத்துவனை தேடி அலைகிறேன்.

சேவிக்கினிய உன் மழலை பேச்சு 8 கோடி மக்களின், 2500 வருடம் பழமை கொண்ட தமிழ் மொழிக்கும் செம்மொழி பெருமை கொடுத்ததோ.

என் மகளே நீ பேச தொடங்கிய அந்த நொடி வார்த்தைகள் அழகானது, கொஞ்சி கொஞ்சி நீ பேசும் வார்த்தைகள் செம்மொழிக்கே இலக்கணம் பயில்விக்கிறதோ.

நீ உன்ன அந்த கடவுளே கமம் செய்ய பூலோகம் பயணம் கொண்டானோ.

பிறவி பலன் அடைகிறேன் நீ அப்பா என அழைக்கும் ஒவ்வொரு முறையும்.

உன்னிடம் கெஞ்சி மன்றாடி கேட்டு கிடைக்கும் அந்த முத்தம் பிரம்மன் குடுத்த வரமாய் தெரியும். 

நீ எச்சில் செய்து குடுக்கும் அந்த இனிப்பு மிட்டாய், நாவுக்கரசனுக்கு அப்பர் குடுத்த விருந்தாய் சுவைக்குதடி.

நீ தூங்கும் நேரம் அந்த நிலவிற்கு உத்தரவிட்டேன் சத்தமின்றி பூமியை சுற்ற.

புத்தகத்தில் உன் கிறுக்கல் ரவிவர்மன் ஓவியமாய் தெரியுதடி.

நீ விளையாட அந்த வானவில்லை வண்ணங்கள் பல தூவ சொல்லவேன்.

மாலை சேர்ந்து மணகோலம் கொண்டு நீ செல்லும் வேலை, என் தேவதையின் பிரிவை நினைத்து வருந்துவேனோ அல்லது உன் மங்கள மண வாழ்வை எண்ணி சந்தோசத்தில் திளைப்பேனோ.

உன் தாயாலும் என் தாயாலும் செய்ய முடியாததை நீ செய்தாய், அதை நான் உணர்ந்தேன் என்னுள், நீ வளர நான் மனிதன் ஆகி முழுமை பெற்றதை.....






வார்த்தைகளுக்கு விளக்கம் 

மதி - நிலவு 

திங்கள் - மாதங்கள் 

முகிழ் - மணம் வீச தொடங்கும் தருணத்தில் உள்ள மலர்கள்

திகழ் - ஒளி / பிரகாசம்

பரிதியும் - சூரியன் 

குமஞ்சம் - சாம்பிராணி 

சேவிக்கினிய - காதுக்கு இனிமையான

கமம் - விவசாயம் / வேளாண்மை 

நாவுக்கரசர் - திருநாவுக்கரசர் 

அப்பர் - அப்பர் எனும் முதியவராய் ஆதி சிவன் உரு மாறி திருநாவுக்கரசருக்கு விருதாளித்தார்.


என்றும் அன்புடன் 
தந்தை

=========================================================================

Comments